கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் மியான்மர் தலைநகர் யாங்கோனில் 127 மில்லியன் டாலர் மதிப்புள்ள துறைமுகத்தை கட்டமைக்க, அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் விருப்பம் தெரிவித்தது. மியான்மர் பொருளாதார கழகம் (Myanmar Economic Corporation) குத்தகைக்கு விட்ட நிலத்தில்தான் இந்த துறைமுகம் அமைகிறது. மியான்மர் பொருளாதார கழகம், மியான்மர் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மியான்மர் ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, பங்குச் சந்தை குறியீடான எஸ்&பி (S&P Index) இண்டக்ஸில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனமும், சிறப்பு பொருளாதார மண்டலமும் அமெரிக்காவால் நீக்கப்பட்டன. ஏற்கனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இத்திட்டம் அமெரிக்க பொருளாதார தடைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், மொத்தமாக மியான்மர் திட்டத்தை கைவிடக்கூடும் என அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கையில், “மியான்மரில் செயல்படுத்தவிருக்கும் திட்டம், அமெரிக்க கருவூலத்தின் துறையான வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (ஓ.எப்.ஏ.சி) பொருளாதார தடைகளை மீறுவதாக, வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் கருதினால் அதானி போர்ட்ஸ் நிறுவனம் இத்திட்டத்தைக் கைவிடக் கூடும்’எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தைக் கைவிடுவதால் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும், இதன் மதிப்பு மொத்த சொத்து மதிப்பில் 1.3 விழுக்காடு தான் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, பொருளாதார ரீதியாக தடைகள் போடப்பட்டு வருகின்றன