மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எவ்வளவு, மாநிலங்களுக்கு அதனை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது தீர்மானிப்பது நிதிக்குழு. 15ஆவது நிதிக்குழு, 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
15ஆவது நிதிக்குழு பிரச்னைகள்
நிதியை ஒதுக்க மாநிலங்களின் மக்கள் தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முந்தைய நிதிக்குழுக்களைப் போல 1979ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கை எடுத்துக்கொள்ளாமல் 15ஆவது நிதிக்குழுவில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியே கிடைக்கும். 1979 முதல் 2011 இடையிலான காலகட்டத்தில், தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது, அதே நேரத்தில் வட மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வது தென் மாநிலங்களுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனை வழங்குவதைப் போல இந்த நடவடிக்கை அமையும் என பல்வேறு மாநிலங்கள் கூறி வருகின்றன.
அதேபோல் நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வளர்ச்சி குறைவான மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகாலமாக அதிக நிதி பெறும் மாநிலங்கள் எந்த முன்னேற்றமும் அடைவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
15ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் தொடர்பாகவும், இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் ஜோதி சிவஞானம் கூறியது,
பரிந்துரைகள்:
மாநிலங்களுக்கான பங்கை கொடுக்கும் முன் பாதுகாப்பு துறை, உள்நாட்டு பாதுகாப்புக்கு சிறப்பு நிதி கொடுக்க வேண்டும் என 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் அடிப்படை பொறுப்புக்கான செலவை மாநில அரசுகளுடன் பங்கிட வேண்டும் என கூறுகிறது.
தமிழகத்தின் பங்கு
மாநிலங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் ஏற்றத்தாழ்வு, சராசரி வருமானம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நிதி பங்கீடு செய்யப்படுகிறது. வளர்ச்சிக்கு குறைந்த மதிப்பீடே கொடுக்கப்படுகிறது. இதனால் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் பங்கும் குறைந்து வருகிறது.
நிதிக்குழுவில் தமிழகத்தின் பங்கு கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. 14 ஆவது நிதிக்குழுவில் தமிழகத்தின் பங்கு 4.023 சதவிகிதமாக இருந்த நிலையில் 15 ஆவது நிதிக்குழுவில் தமிழகத்தின் பங்கு 4.189 என்ற அளவுக்கு சொற்பமாக உயர்த்தியிருக்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மதிப்பீடு, திறமையான வரி வசூல் ஆகியவற்றால் சொற்ப முன்னேற்றம் அடைந்துள்ளது.
6 ஆயிரம் கோடி இழப்பு
நிதிக்குழு அறிக்கையைவிட மிகப் பெரிய மாற்றம் பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ளது. நடப்பு 2019- 2020 நிதியாண்டில் வரி வருவாய் 24.6 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பட்ஜெட்டில் அரசின் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 3 லட்சம் கோடி ரூபாய் குறையும் என தெரியவந்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கான நிதி குறைந்திருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் மூன்று காரணங்கள்