இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை இன்று(ஜூலை.7) தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது மூத்த மகன் பெயர் துரை, இரண்டாவது மகன் மகேந்திரன், மகள் பெயர் சந்தானம். எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம், பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பல் ஒன்றால் கடந்த மே 18ஆம் தேதியன்று கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கொலையான ஜெயக்குமாரின் தம்பி ஆழிகுமார் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மே 22 ஆம் தேதி அன்று சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உட்பட சில காவல் துறையினர் எனது மூத்த மகன் துரையை தேடி எனது வீட்டிற்கு வந்தனர்.
ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாக துரை மீது சந்தேகம் உள்ளது எனக்கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றனர். இத்தனைக்கும் கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பைகுளம், பாப்பான் குளத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பின்னர் பாப்பான் குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு கடந்த 23ஆம் தேதி அன்று சென்றனர். அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த இரண்டாவது மகன் மகேந்திரனை காவல்துறையினர் வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று, சட்ட விரோதமாக அவரை தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை, உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்போது, காவல்துறையினர் மகேந்திரனைப் பார்த்து தற்போது காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து உயர் அலுவலர்களிடம் எவ்வித புகாரும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர்.
காவல்துறையினர் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர் சிகிச்சைப் பெற்றுவந்தவர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் ஆதரவுடன் எனது மகன் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பந்தமாக, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று புகார் அளித்தோம்.
ஆனால், குற்றம் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. சட்ட விரோதமாக எனது மகனை காவல் நிலையம் அழைத்து சென்று தலை மற்றும் உடலில் தாக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பந்தமாக தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
அதைபோல, எனது இளைய மகன் மகேந்திரன் உயிரிழப்பு சம்பந்தமாகவும் சட்டவிரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரை தாக்கியது தொடர்பாகவும் விசாரணை செய்ய உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும" என மனுவில் கூறியிருந்தார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இது போல பல மனித உரிமை மீறல்களும், காவல் நிலைய படுகொலைகளும் நடந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மனுவின் மீதான விசாரணையும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.