கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் காதர்பாட்சா. இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட உறவினரை ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக, காதர்பாட்சா பலமுறை வாகன இ-பாஸூக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் இ-பாஸ் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது நண்பர்கள் மூலம் போலி இ-பாஸ் தயாரித்துள்ளார். போலி இ-பாஸ் மூலம் கர்நாடகாவில் இருந்து காரில், தனது உறவினர்கள் உட்பட நான்கு பேரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆரம்ப எல்லையான பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் காரை சோதனை செய்தபோது, அவர்கள் பயணம் செய்து வந்த இ-பாஸ் உண்மையானதா என கியூ ஆர் கோடு மூலம் பரிசோதனை செய்ததில், இந்த பாஸ் போலியானது எனவும்; காலாவதியாகிவிட்டது எனவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து போலி இ-பாஸ் தயாரித்ததாக நான்கு பேர் மீது பார்த்திபனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காரைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் நான்கு பேரும் பார்த்திபனூர் சமுதாயக் கூடத்தில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்ய இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.