கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உள்பட்ட மேல் நங்கவரத்தைச் சேர்ந்த அண்ணா நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் தர்மராஜ் (27).
இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் பெட்டலை வாய்க்கால் காவல் நிலைய பகுதிக்குள்பட்ட கடைவீதி பகுதியில் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் வசிக்கக்கூடிய மக்கள், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரைக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பெட்டலை வாய்க்கால் காவல் துறையினருக்கு அவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த காவல் துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.