திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டுவருவது எச்.எச்.168 நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சிறப்பு கடன் உதவியாக 66 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 5 ஆயிரம் வீதம் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் திறனை பூர்த்தி செய்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வழிகாட்டுதலோடு சிறப்பு கடன் உதவியை திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் பெருந்தலைவர் பெருமாள் நாகராஜன் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்தக் கடனை ஆறு மாதங்களில் திருப்பிச் செலுத்த தேவையில்லை என்றும் ஆறு மாதத்திற்குப் பிறகு 18 மாதம் தவணையாக செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உறுப்பினர்கள் பெற்றுள்ள விவசாய கடனை ஆறுமாதத்திற்கு வட்டி இல்லாமல் கட்டுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இந்த விழாவில் வங்கி பொது மேலாளர் இளங்கோவன் கூறுகையில், கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கோபி, நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர்களின் தலைவி, துணைத் தலைவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் எவ்வித வேலையும் இன்றி கஷ்டப்பட்டு வரும் நேரத்தில், கூட்டுறவு துறையின் மூலம் வட்டியில்லா தொழிற்கடன் வழங்கியதற்கு அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் தமிழ்நாடு அரசிற்கு நன்றியை தெரிவித்தனர்.