கோவை, துடியலூரை அடுத்த ராக்கிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கெளதம் - ஜோதி குமாரி தம்பதியினர். இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். நிறை மாத கர்ப்பிணியான ஜோதி குமாரி, கருவுற்றது முதலே துடியலூரில் உள்ள 24 மணி நேர பிரசவம் பார்க்கும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஆட்டோவில் துடியலூர் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்திற்கு அவரை கூட்டிச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் அவருக்கு பிரசவம் பார்க்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை தாளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று கௌதம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்த நிலையில், வழியிலேயே ஜோதி குமாரியின் பனிக்குடம் உடைந்து, ஆட்டோவிலேயே குழந்தை பிறந்துள்ளது.
அழகிய பெண் குழந்தையை ஜோதி குமாரி பெற்றெடுத்த நிலையில், தொப்புள் கொடி மட்டும் அறுபடாமல் இருந்ததால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார்.
கரோனா பரிசோதனை செய்யாமல் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று முதலில் தெரிவித்த நிலையிலும், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சண்முக வடிவு குழந்தையின் தொப்புள் கொடியை பின்பு அகற்றினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தாளியூர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
துடியலூரில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையிலும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சரிவர அங்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் இயங்காத பேருந்துகளுக்கு வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம்' - ஆம்னி பஸ் சங்கம்!