இந்தியாவின் தற்போதைய அரசியல் கள பரபரப்பை 1984ஆம் ஆண்டில் இருந்து தொடங்குவதே உசிதமாக இருக்கும். இதற்கான காரணங்களும் பல உண்டு. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தன் முதல் தேசிய தேர்தலை சந்தித்த வருடமும் அதுதான். தற்போதையே 17ஆவது மக்களவையின் 303 இடங்களை பிடித்து அசுர பலத்துடன் இருக்கும் பாஜக, 1984இல் நடத்த மக்களவை பொதுத்தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.
பாஜகவின் மிகப்பெரிய தலைவராக பார்க்கப்படும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன் சொந்த தொகுதியில் 1984ஆம் ஆண்டு தோற்றார். இப்படிப்பட்ட நிலையில் இருந்த பாஜக 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜகவின் அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அதன் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள். வாஜ்பாய் தொடங்கி தற்போது பாஜக தேசியத் தலைவராக இருக்கும் அமித் ஷா வரை கட்சிக்கு பெரும் பங்காற்றியவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அக்கட்சி செயல்பட்டுவருகிறது.
ஆனால் இந்தியாவின் தற்போதைய முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ் பாஜகவுக்கு நேர் எதிர்மாறாக செயல்படுவது அக்கட்சிக்கு தொய்வு என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமால் இருக்கிறார் என்பதற்கு பல காரணங்களை அரசியல் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றபோது நாடாளுமன்றத்திற்கு ராகுல் வருகை தருவாரா... இல்லையா? என கேள்வி எழும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன. இந்த விவகாரம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு வித்திட்டது.
முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் தேவை அதிகமாக உள்ள இந்த நேரத்தில் ராகுல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என பலரால் விமர்சிக்கப்பட்டது. தேர்தல் அரசியலில் உச்சத்தில் இருக்கும் பாஜக அந்த வெற்றியை கொண்டாட கூட நேரமில்லாமல் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு மேற்குவங்கத்திலும் 2024ஆம் ஆண்டு ஒடிசாவிலும் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே களப்பணியை தொடங்கி அதற்கான அடிப்படை கட்டமைப்பு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அதிரடியாக அறிவித்தார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பதவி விலகுவது சரியான செயலா என பலர் கேள்வி எழுப்பினர். தலைமைப் பண்பு என்பது தோல்வியையும், வெற்றியையும் ஒரே அளவில் பக்குவப்பட்டு இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என தடாலடி முடிவெடுப்பது அத்தலைவரின் எதிர்கால நலனையும் அக்கட்சியின் நலனையும் பாதிக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.
1977 முதல் 1984 வரை நடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக படுதோல்வி அடைந்தது. எனினும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சரியாக செயல்பட்டு கட்சியை 1989ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வைத்தார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் திமுக பல இன்னல்களை சந்தித்தது; அப்படி இருந்தும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து உயிர்ப்போடு வைத்திருந்தார். அங்குதான் தலைமைப் பண்பு, பாங்கு ஒருங்கே அமைந்திருந்தது. அதுதான் தலைமைப் பண்புக்கான இலக்கணம் என்று கூட சொல்லலாம்.
ஆளும் கட்சியாக இருந்தபோது திமுக செயல்பட்டதை விட பல மடங்கு சிறப்பாக எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் செயல்பட்டது.
செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அங்கிருந்து கட்சியை மீண்டெழ செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவது நேரு குடும்பத்தைத் தவிர வேறெந்த தலைவர்களின் உழைப்புக்கும் அங்கீகாரம் தராமல் இருப்பது அக்கட்சியின் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் திசைவழியையே மாற்றிப்போட்ட முக்கியமான இரண்டு பிரதமர்களாக பார்க்கப்படுவது நரசிம்மா ராவ், மன்மோகன் சிங் ஆவர். பனிப்போருக்கு பிந்தைய காலக்கட்டமான 1991ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் நாட்டின் பொருளதாரக் கொள்கையையே மாற்றினார். தாராளமயமாக்கலை ஊக்கவித்து அமெரிக்காவுடன் நரசிம்ம ராவ் நெருக்கம் காட்டினார்.
மக்கள் தொகையின் எண்ணிக்கையில் தற்போது அதிகமாக உள்ள நடுத்தர வர்க்கத்தினை உருவாக்கியவர் நரசிம்ம ராவ் என்றால் மிகையாகாது. மென்பொருள் பொறியியல் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி 1990களில் நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கும்போது அதிகரித்தது. இப்படிப்பட்ட தலைவரின் மறைவின்போது காங்கிரஸ் தலைமையகத்துக்கு உள்ளே கூட அவரின் உடலை வைக்க அக்கட்சி மறுத்துவிட்டது என்பது 'உண்மையான' கதர்சட்டை தொண்டர்களை வேதனையடைய வைத்தது என்றே கூறலாம்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்தபோது இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர் மன்மோகன் சிங். 2009ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் மன்மோகன் சிங் 2004 முதல் 2009 வரை வழங்கிய சிறப்பான ஆட்சி. 2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் மன்மோகன் சிங் செய்த சாதனைகளை கூட விளக்கி வாக்கு சேகரிக்காமல் இந்திர காந்தி, ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி வாக்குக் கேட்டதுகூட அக்கட்சியின் தேய்பிறையாகவே பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட தலைவர்களின் சாதனைகளை முதலில் அங்கீகரிக்க ராகுல் முன் வரவேண்டும். சரத் பவார் தொடங்கி இன்று ஜெகன் மோகன் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களே அக்கட்சிக்கு சவாலாக மாறியது மற்றொரு பிரச்னையாக பார்க்கப்படுகிறது. முதலில் மாநில தலைவர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். கட்சியை முற்றிலுமாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்க வேண்டிய கட்டாயத்தில் ராகுல் உள்ளார்.
இவை அனைத்தையும் விட மிக முக்கியச் சிக்கலாக பார்க்கப்படுவது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. நேரு மாதிரியான சிறந்த கொள்கையாளன் இருந்த கட்சியில் தற்போது கொண்ட கொள்கையில் தெளிவில்லாமல் இருப்பது காலத்தின் கொடுமை என வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கைது செய்யும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாட்டிறைச்சியை சட்டவிரோதமாக கடத்தியவர்களை மத்தியப் பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு கைது செய்தது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அக்கட்சியின் சறுக்கலுக்கு இதுபோன்ற பல காரணிகளை வகைப்படுத்தலாம்.
மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிச ஆகிய கொள்கைகளை உலகுக்கு சொல்லித் தந்த காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட கட்சியை கீழ்நோக்கித் தள்ளும் செயல்களை செய்துவருவது கதர்சட்டைக்காரர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை பிரச்னைகளை தீர்க்காமல் ராகுல் பதவி விலகப் போகிறேன் என சொல்வது சரியான செயலாக இருக்காது. ஜனநாயகம் தழைத்தோங்க எதிர்க்கட்சிகள் தேவை, காங்கிரஸ் கட்சியை ஒழுங்குக்கு கொண்டவர ராகுல் தேவை... இதுவே காலத்தின் கட்டாயம்!
தீரமாய் செயல்படுங்கள் ராகுல்... பயணத் தொலைவு தூரம்! கொள்கையில் தயாளம் காட்டாமல் சீரிய சிந்தனையோடு கட்சியை வலிமையோடு நடத்துங்கள் என்பது ஏகோபித்த காங்கிரஸ்காரர்களின் குரலாக இருக்கிறது.