தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் அதிமுக பேரூர் கழக மாணவரணி செயலாளராக பதவி வகித்து வருபவர் ராஜீவ்(35). இவரது மனைவி பிரியதர்ஷினி அரசுத்துறையில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜீவிற்கு தேவாரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர். இதனையடுத்து தனது தொலைபேசியில் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாச புகைப்படத்தை ராஜீவ் பதிவு செய்து வைத்துள்ளார். இதனிடையே ராஜீவுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்துள்ளனர்.
இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு ராஜீவ் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உனது நிர்வாணப் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தான் கூறும்படி நீ நடந்து கொள்ள வேண்டும் எனவும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
பின்பு அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படத்தை ராஜீவ் உபயோகப்படுத்தும் வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டுள்ளார். மேலும் ராஜீவின் மனைவி மூலமாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தேவாரம் காவல் துறையினர் ராஜீவ் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் ராஜீவ் மீது கரிசனம் காட்டாமல் ஆபாச படம் எடுத்து பெண்ணை மிரட்டி வந்த குற்றத்திற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.