கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரவல் அபாயம் அதிகமாக உள்ளதால் விமானப் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மே 7ஆம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டு வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகளோடு அழைத்துவரப்பட்ட அவர்களை கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனை செய்து தனியார் விடுதிகளிலும், அரசு காப்பகத்திலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் சிங்கப்பூரில் சிக்கித் தவித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிறப்பு விமானம் மூலம் ஜூன் 25ஆம் தேதி சென்னைக்கு திரும்பினார். சென்னைக்கு வந்ததையும், 14 நாள்கள் இங்கே தங்க வேண்டும் என்பதையும் கடலூரில் உள்ள அவரது மனைவிக்கு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். விமான நடைமுறைகள் முடிந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 2 நாள்களாக ராஜேந்திரன் அவரது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி உடனடியாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் இதை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், அவரது கணவர் நலமாக இருப்பதாக சமாதானம் செய்து அனுப்பியதாக அறிய முடிகிறது. இருப்பினும், அவரது மனைவி சந்தேகமாக இருந்ததால் இணையதளம் மூலம் குறிப்பிட்ட சொகுசு விடுதியை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது கடந்த ஒன்றரை நாள்களாக அவரது கணவர் ராஜேந்திரனை காணவில்லை என்றும், அவரை தேடி வருவதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பின்னர், மீண்டும் தொடர்பு கொண்ட விடுதி நிர்வாகம் அவரது கணவர் ராஜேந்திரன் இரண்டு நாட்களாக வயிறு வலி என சாப்பிடாமல் இருந்ததாகவும், கழிவறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் ராஜேந்திரனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இறந்த ராஜேந்திரனின் உடலை சென்னைக்கு வந்து பெற்றுகொள்ளுமாறு அவரது மனைவியிடம் தேனாம்பேட்டை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ராஜேந்திரனின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில், "கரோனா பரிசோதனை செய்த நபர்களை கண்காணிப்பது நிர்வாகத்தின் கடமை. ஆனால், முதலில் அவர் காணாமல் போயுள்ளதாக கூறினர். பின்னர், அவர் தங்கியிருந்த அறையிலேயே இறந்துவிட்டார் என கூறுகின்றனர். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என பதிவிட்டுள்ளனர். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக பேசிய தேனாம்பேட்டை காவல்துறையினர், "ராஜேந்திரன் குமரவேல் கழிவறையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்கூறாய்வு சோதனைக்கு பிறகுதான் ராஜேந்திரனுக்கு கரோனா தொற்று இருந்ததா ? என்பது தெரியவரும்" என்றனர்.