திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 3 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். சின்னாளபட்டி கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படக்கூடிய, நெசவாளர் கூட்டுறவு சொசைட்டி 7-சங்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதி நெசவாளர்கள், கூட்டுறவு சொசைட்டியில் இருந்து நெசவு செய்வதற்கு உண்டான நூலினைப் பெற்று, நெசவு நெய்து, மீண்டும் சொசைட்டிக்கு வழங்கி, அதன் மூலம் வருமானம் பெற்று வாழ்ந்து வந்தனர்.
ஒரு சேலைக்கு கூலியாக ரூ. 400 முதல் ரூ.600 வரை பெற்று வந்தனர். தற்போது கரோனாவினால் மூன்று மாதத்திற்கும் மேலாக வருமானமின்றி, நெசவாளர்கள் தவித்து வந்தனர்.
தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தபோதும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நூல் வழங்கவில்லை. கூட்டுறவு சங்கத்திற்கு நூல் கிடைக்காததால், அவர்களுக்கும் நெசவாளர்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இடைத்தரகர்கள் அதிக விலைக்கு நெசவாளர்களுக்கு நூல் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இடைத்தரகர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு மட்டுமல்லாது, தனியாக தறி வைத்து நெய்து வரும் நெசவாளர்களுக்கும் மூலப்பொருளை கொடுத்து சேலையாக நெய்து வாங்கி வந்தனர். இந்நிலையில், இடைத்தரகர்களும் கூலியைக் குறைத்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே, மூலப்பொருள் ஏதும் கிடைக்காமல் நெசவுத்தொழிலை மேற்கொள்ள முடியாமல் நெசவாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதனால் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள நெசவாளர்கள், அரசிடமிருந்து நல வாரியம் மூலமாக அனைவருக்கும் ரூ. 2ஆயிரம் வழங்க வேண்டும் எனவும்; கூலியை உயர்த்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னாளபட்டி , காவல் துறையினர் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது, அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடுத்தனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெசவாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் காவல், வருவாய்த்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், கூலி உயர்த்தி கொடுப்பது தொடர்பாக இரண்டு நாள்களில் முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். நெசவாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நேரத்தில் கஞ்சித்தொட்டி திறந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.