பிரிட்டன் கம்பெனி ஆட்சியை எதிர்த்து போராடிய விடுதலை வீரர் அழகு முத்துக்கோனின் நினைவு நாள் நாளை (ஜூலை 11) அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய் மண்ணாம் நம் தமிழ்நிலத்தை எவரும் அடிமைப்படுத்திட விடமாட்டோம் என வெள்ளையர் ஆதிக்கத்தை வீறுகொண்டு எதிர்த்து நின்ற தமிழக மாவீரர்களில் வீரன் அழகு முத்துக்கோனின் தியாகம் அளப்பரியது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரர்களின் தியாகத்தைப் போற்றி, தி.மு.க ஆட்சியில் தாமிரப்பட்டயம் வழங்கி தலைவர் கலைஞர் சிறப்பித்தார். அவர் முதல்வராக இருந்தபோது ‘அரிமாநெஞ்சன் அழகு முத்துக்கோன்' என்று போற்றிப் புகழ்ந்து, அரசு சார்பில் நினைவு நாள் விழா எடுத்து அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்திடச் செய்தார்.
அடிமைத்தனத்தை எதிர்த்து - உரிமைகளைக் காப்பதற்கான போர்க்களத்தில் மடிந்த மாவீரன் அழகு முத்துக்கோனின் தியாக நினைவினை என்றும் போற்றிடுவோம்" என தெரிவித்துள்ளார்.