தமிழ்நாடு முழுவதுமுள்ள நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்திடும் வகையில் தமிழ்நாடு நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பினை உருவாக்கி மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பின் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில், கலந்து கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்தபடி வாத்திய இசைக்கு ஏற்றவாறு நடனங்களை ஆடியபடி பொதுமக்களிடையே கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஊர்வலமாக வந்தனர்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சத்தியராஜ் கூறுகையில், 'கரோனா கால ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதுமுள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 35 ஆயிரம் கலைஞர்களுக்கு மட்டுமே நிவாரண உதவித் தொகையை வழங்கியுள்ள நிலையில் மீதியுள்ள அனைத்து கலைப்பண்பாட்டுத் துறை அடையாள அட்டைகளை வைத்துள்ள கலைஞர்களுக்கும் நிவாரண உதவித்தொகைகளை வழங்கிட வேண்டும்.
மேலும் கலைப்பண்பாட்டுத்துறை அடையாள அட்டைகளை வைத்துள்ள கலைஞர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கிட வேண்டும். வயது முதிர்ந்த ஆண் கலைஞர்கள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும்.
கலைத்தொழிலை மட்டுமே நம்பி, தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். மேலும் தங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசிடம் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப் படாமல் உள்ளது. எனவே, தேவைப்பட்டால் போராடவும் தயாராக உள்ளோம்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.