தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 117.90 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று(ஆகஸ்ட் 5) காலையில் 3 அடி உயர்ந்து 120.60 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 2747 மி.கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 6,585 கன அடி நீர் வரத்துள்ள நிலையில், தமிழ்நாடு பகுதிகளுக்கு 933 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் 50.4 மி.மீ மற்றும் பெரியாறு அணைப்பகுதியில் 98.2 மி.மீ அளவு மழை அளவு பதிவாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால், நீர் வரத்தின்றி காணப்பட்ட வைகை அணைக்குத் தற்போது 203 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை இன்று(ஆகஸ்ட் 5) காலை 30.32அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 381 மி.கன அடியாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து இதேபோல் கனமழை பெய்து வந்தால் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.