உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஒராண்டு தடைக்குப் பிறகு வார்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளதால், அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆஃப்கானிஸ்தான், இந்திய அணிக்கு எதிராக அரைசதம் விளாசி அடக்கி வாசித்த வார்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி மிரட்டினார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 255 ரன்களை குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளரும் முன்னாள் கேப்டனுமான பாண்டிங் கூறுகையில், "பந்துவீச்சாளர்களின் லைன் அன்ட் லெங்க்தை வார்னர் முன்னதாகவே கணித்து சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஏரளமான புல் ஷாட்டுகளை ஆடியது, அவருக்கு நல்லதாகவே அமைந்தது. எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரத்துடன் அவர் சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். இதுபோன்ற ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தினால், நிச்சயம் அவர்தான் இந்தத் தொடரில் அதிகமான ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கணத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நாளை ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள 20 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. தற்போது இந்தத் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 279 ரன்களோடு முதலிடத்தில் உள்ளார்.