2018ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதல்முறையாக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி ரூ. 880 கோடி (127 மில்லியன டாலர் ) வருவாய் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து, போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ ரூ. 756 கோடி வருவாய் பெற்று (109 மில்லியன் டாலர்) இரண்டாவது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ. 728 கோடி (105 மில்லியன் டாலர்) வருவாய் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பெற்றுள்ளார். விளம்பரம், விளையாட்டு ஊதியம் மூலம் ரூ. 173 கோடி ( 25 மில்லயன் டாலர்) வருவாய் ஈட்டி இவர் 100ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 66 சதம் விளாசி மிரட்டிய கோலி, தற்போது ஃபோர்ப்ஸ் நாளிதழ் பட்டியலிலும் சதம் விளாசியுள்ளார்.