புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி அப்பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தை காவல் துறையினர் அனுமதிக்காததால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தில் பெண்களுடன் இணைந்து மதுவிலக்கு மக்கள் இயக்கத்தினரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, “அரிமளம் பகுதியிலுள்ள இந்த டாஸ்மாக் கடைகளால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. ரேஷன் கடையில் கொடுக்கும் அரிசியைக் கூட ஆண்கள் எடுத்துச்சென்று விற்றுவிட்டு பின் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கி குடிக்கின்றனர்.
பிழைப்பு நடத்துவதற்கு பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் இதுபோன்ற செயல்கள் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, இறந்தவர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் மிகவும் அதிகம்.
ஆட்சி நடத்துவதற்காக அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டது. ஆனால் இன்னும் கோயில், குளங்கள் கூட திறக்கப்படவில்லை. இது என்ன அத்தியாவசிய தேவையா? தயவுசெய்து இந்தக் கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.