வெனிசுலா நாட்டின் அதிபராக மதுரோ பதவியில் இருக்கும்போதே எதிர்கட்சித் தலைவரான ஜுவான் குவைடோ தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டார். இதனால் அங்கு குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் மனிதாபிமான உதவிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைகளை அடைத்துள்ளார், அதிபர் மதுரோ. மனிதாபிமான உதவிகள் நாட்டுக்குள் நுழைவதை மதுரோ தடுத்ததிலிருந்து அங்கு உணவு மற்றும் மருந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு குழப்பம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மதுரோவின் பாதுகாப்புப் படை போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் வெனிசுலாவின் எல்லையோரம் வசிக்கும் மக்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் பாதுகாக்க, தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி கொலம்பியா நாட்டுக்கு குடியேறி வருகின்றனர்.