கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடவும், நோய்ப்பரவலைக் குறைத்திடவும் தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட அனைத்துவகை வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களுக்குத் தேவையான பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஈரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பிரதான சாலைகள், முக்கிய சந்திப்புகளில் வழக்கத்தைவிடவும் கூடுதலான காவல் துறையினர் நியமிக்கப்பட்டு பலத்த கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அத்தியாவசியக் காரணங்களுமின்றி வீடுகளை விட்டு வெளியேறி வாகனங்களில் சுற்றுபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மருத்துவத் தேவை உள்பட முக்கியத் தேவைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்திலுள்ள 135க்கும் மேற்பட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், மாநகரத்தின் முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.