கரோனா பெருந்தொற்று அதிகமாகப் பரவிவருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும்பொருட்டு கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறும்போது, "வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வரும் நபர்களின் மூலம் அதிகமான நோய்த்தொற்று பரவுவதால் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் 36 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுவந்தது.
ஆனால், பல இடங்களில் மக்கள் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்வதைத் தவிர்த்து கிராமப்புறம், மலைப்பகுதிகளின் வழியாக திண்டுக்கல் பகுதிக்குள் வருவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தற்போது கூடுதலாக 12 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக லிங்கவாடி கோட்டையூர், பொய்யம்பட்டி, அணைப்பட்டி, கள்ளர் மடம், கொங்குவார்பட்டி பிரிவு, கலர் பட்டி செங்குறிச்சி, மாமரதுபட்டி உள்ளிட்ட 12 இடங்களில் புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிவரை திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வந்த இருசக்கர வாகனம் 171, மூன்று சக்கர வாகனம் ஆறு, நான்கு சக்கர வாகனம் 145 என மொத்தம் 322 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும் 283 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.