மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும், உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கி அதை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவலைக் காரணம் காட்டி காவல் துறையினர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய சிந்தனைசெல்வன், "உயர் சிறப்பு நிறுவனங்களில் எவருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டால் இட ஒதுக்கீட்டு பிரிவினர் தகுதி, திறமை அற்றவர்கள் எனும் கருத்தாக்கத்தை ஒப்புக்கொண்டதாக அமைந்துவிடும். தற்போதுள்ள அனைத்து தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கென சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.