கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட உலகளாவிய பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழ்நாட்டில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்? எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன? "வந்தே பாரத்" அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான பதில் என்ன?" என்று கேட்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர், "வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்ப விண்ணப்பித்திருந்த 26 ஆயிரத்து 368 பேரின் விண்ணப்பம் நிலுவையில் இருக்கிறது. "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், 29 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரம் பேர் மீட்கப்படுவர்" என தெரிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளி நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 1248 விமானங்கள் இயக்க உள்ளன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில், 17,707 பேர் தமிழர்கள் ஆவர். மேலும், மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.