கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் சில தளர்வுகளை மட்டும் அறிவிக்கப்பட்டு தற்போது பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டன.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இதுவரையில் கரோனா நிவாரண நிதியும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. அந்த வகையில், சேலத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் சென்று கரோனா நிவாரண நிதி கேட்டு இன்று மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை, கட்டுமான, அமைப்புசாரா மற்றும் 12 புதிய நல வாரியத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஜீவானந்தம் "சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக கல்வி, இயற்கை மரணம் உள்ளிட்டவைகள் குறித்த உதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் வழங்கப்படவில்லை .
கடந்த நான்கு மாதங்களாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் அலுவலகம் திறக்கப்படவில்லை. பதிவு புதுப்பித்தல் போன்ற பணிகள் அமைப்புசாரா நல வாரியம் மூலம் நடைபெறவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நல வாரியம் முறையாக செயல்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பயனடைந்தனர் .
ஆனால் தற்போது நலவாரியம் முடங்கிக் கிடக்கிறது . ஆறு மாதங்களாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
மேலும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண நிதி உதவியும் ரேஷன் பொருட்களும் கிடைக்கவில்லை . எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து சேலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருக்கிறோம்.
எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சேலத்தில் ரூ.6.5 லட்சம் பறிப்பு; நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் 5 பேர் கைது!