கோவை புலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் இருந்து புலேந்திரன் (34), அவரது மகள் சதிஷா (6) ஆகியோர் சட்டவிரோதமாகத் தூத்துக்குடி கடல் வழியாக கடந்த மே 28ஆம் தேதி படகுமூலம் கிளம்பி மே 29ஆம் தேதி இலங்கை தலைமன்னாரில் உள்ள பேசாளை கடற்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு இவர்கள் இருவரும் இலங்கை மடு மாவட்டம் பண்டிவரிச்சன் நகரில் உள்ள புலேந்திரனின் தந்தை ஜேசுதாசனை சென்று சந்தித்து உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த இலங்கை காவல் துறையினர் ஜேசுதாசன் வீட்டிற்குச் சென்று புலேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் சட்டவிரோதமாக இலங்கையில் குடியேறியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடமிருந்த செல்போனை சோதனைசெய்ததில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு பேரின் கைப்பேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு பேசியிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி ஜூன் 23ஆம் தேதிக்குள் தகவல் அறிக்கை அளிக்க வேண்டுமென தூத்துக்குடி காவல் துறை, க்யூ பிரிவு, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்ளிட்டோருக்கு இலங்கை காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.