திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியை கரோனா வார்டாக மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில், அதற்குத் தகுந்தாற்போல் மாற்றப்பட்டு படுக்கை அறை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி 12 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் திருவாரூர் அருகே பாமணி பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும்; அம்மையப்பனைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இருவருக்கும், துபாயிலிருந்து வந்த பயணி, கூத்தாநல்லூரைச்சேர்ந்த ஒருவர் உள்பட 12- பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று(ஜூலை 11) திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருந்து 8 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 181 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே இன்று(ஜூலை 12) முதல் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி கரோனா வார்டாக செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர், சுகாதாரத் துறை ஊழியர்கள் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வார்டில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 31 நபர்களை திரு.வி.க அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்து, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தீவிரமான சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.