தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மட்டும் 50 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 321 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் உடனடியாக சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணியாளர்கள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதியான திரேஸ்புரத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியிலிருந்து யாரும் வெளியே வருவதற்கும் வெளியாட்கள் உள்ளே நுழைவதற்கும் காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் தூத்துக்குடி அனல்மின் நிலையப் பணியாளருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனல் மின் நிலையப் பகுதியில் சரியான முறையில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தூத்துக்குடியில் சமூகப் பரவல் ஆரம்பித்துள்ளதா என்ற அச்ச உணர்வு மக்களிடையே எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றுவர மீன்வளத் துறை அலுவலர்கள் தடைவிதித்துள்ளனர்.