தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை, இத்தொற்றினால் தமிழ்நாட்டில் 957 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வரிசையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் என்பவரும் தற்போது உயிரிழந்துள்ளார். இவரின் மறைவையொட்டி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையினர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதுடன், உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், "கோவிட்-19 தொற்று காரணமாக ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனும் செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.