மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ், செயல்படும் தேசிய கல்வி நிறுவனங்களின் தர கட்டமைப்பு (என்.ஆர்.ஐ.எப்) தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் நாட்டிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகங்களில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT - National Institute of Technology, Trichy) முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐந்தாவது முறையாக, என்ஐடி இந்த சாதனையைப் படைத்துள்ளது. மேலும், பொறியியல் பிரிவு தரவரிசைப் பட்டியலில் திருச்சி என்ஐடி ஒன்பாதவது இடத்திற்கு 64.1 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 61.62 புள்ளிகளுடன் திருச்சி என்ஐடி 11ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'கற்றல், கற்பித்தல், புதிய விரிவுரையாளர்கள் நியமனம், மாணவர்கள் திறனை மேம்படுத்துதல் போன்ற காரணங்களால் இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஆராய்ச்சி, தொழில் சார்பு விஷயங்கள் போன்றவற்றால் குறிப்பிட்ட முன்னேற்றம் கிடைத்துள்ளது.
தொடர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், மானியம் பெறுதல், தொடர் கல்வி திட்டம், கலந்தாய்வு, சராசரியான சம்பளத்துடன் கூடிய பணி நியமனம், பிஹெச்.டி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனம் மேற்கொண்ட முயற்சி ஆகியவையும் இந்த சாதனைக்கு முக்கிய காரணிகளாகத் திகழ்ந்துள்ளது. திருச்சி என்ஐடி, பொறியியல் பிரிவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது மிகப்பெரிய சாதனையாகும். ஒன்று முதல் எட்டு இடங்கள் வரை ஐஐடி போன்ற பெரு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளது.
ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் திருச்சி என்ஐடி மீண்டும் 24ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் முதல் 25 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் திருச்சி என்ஐடி இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 12ஆவது இடத்தில் இருந்து 9ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதன் மூலம் கனவு நினைவாகி உள்ளது. அதனால், தொடர்ந்து முன்னேற்றமடைய ஆய்வு வெளியீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பிஹெச்.டி பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும். உயர் கல்வி மற்றும் பணியமர்த்தலில் அதிக அளவில் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்றவற்றில் தொடர்ந்து அனைவரும் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அடையலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் ஜெலட்டின் வெடிமருத்து குச்சியை கடித்த சிறுவன் பலி