தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த வட்டுவனஹள்ளி ஊராட்சியில் எரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை என மூன்று மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.
இதில், அலகட்டு மலையில் மட்டும் லிங்காயத் என்னும் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், எரிமலை கோட்டூர் மலை கிராமத்தில் மலைவாழ் மக்கள், பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் எரிமலையில் மலைவாழ் மக்களின் தெய்வமாக வழிபடும் மாதேஸ்வரன் கோயில் திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோயிலுக்கு ஏரிமலை, அலகட்டு மலை, கோட்டூர் மலை, மலை கிராமம் அல்லாத பெல்ரம்பட்டி, கரிகுட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விழா எடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு எரிமலையில் மாதேஸ்வரன் சுவாமி திருவிழா வெகு விமர்சையாகத் தொடங்கியது. இதில் இரவு முழுவதும் கொடகரைப் பகுதியிலிருந்து மாதேஸ்வரன் சுவாமி எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து, லிங்காயத்து மலைகிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, இரவு முழுவதும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து லிங்காயத் மலைவாழ் மக்கள் பாரம்பரிய உடையணிந்து, இரவு முழுவதும் விடிய விடிய மழை பாரம்பரிய நடனம் ஆடினர்.
விடியற்காலை ஆறு மணிக்கு மாதேஸ்வரன் கோயில் முன்பு, பொதுமக்கள் தீ மிதித்தனர்.இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சுவாமியை எடுத்து தீ மிதித்து, தீ விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்: அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு