காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் வேள்வரை ஆற்றுப்படுகை அமைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆற்றுமணலை அனுமதியின்றி எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் வேள்வரை ஆற்றில் மணல் கொள்ளையில் சில சமூகவிரோத கும்பல் ஈடுபட்டுவருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி அங்கு சிலர் ஆற்றுமணலைக் கொள்ளையடிப்பதாக மீமிசல் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று (ஜூன் 13) இரவு ரகசியமாக சென்று வேள்வரை ஆற்றுப்படுகையை கண்காணித்து வந்தனர். இருட்டில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதை கவனித்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.
இதனிடையே, காவல்துறையினர் வருவதை கவனித்த மணல் கொள்ளையர்கள் இருட்டில் தப்பி ஓடியுள்ளனர். அந்தச் சோதனையின் போது, ஆற்றுமணலை அள்ள அந்த கும்பல் பயன்படுத்திய டிராக்டரை மீமிசல் காவல்துறையின் பரிமுதல் செய்துள்ளனர். வேள்வரை ஆற்றுப்படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரின் ஓட்டுநர் மகாலிங்கம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.