நாகை மாவட்டம் மாதானம் - மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரத்திற்கு கெயில் நிறுவனம், எண்ணை எரிவாயு எடுத்துச் செல்லவதற்கு குழாய் பதிக்கும் பணிகளில் மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் 5 வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இவர்கள் எதிர்ப்பையும் மீறி விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் இன்றும் கெயில் நிறுவனம், செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர், உட்பட பல கிராமங்களில் குறுவை சாகுபடி செய்த நிலங்களில், போக்லைன் மூலம், பயிர்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் ஈடிவி பாரத்திற்கு பிரேத்யக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,
"குறுவை சாகுபடி நடைபெறும் நிலையில், கெயில் நிறுவனம் பொக்லைன் மூலம், பயிர்களை நாசம் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக கேள்வி கேட்டால், கெயில் நிறுவனம் எங்கள் மீது நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், கொலைமிரட்டல் தருவதாகவும் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது. எங்கள் மீதான புகார்களை வாபஸ் பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடும் அரசியில் தலைவர்கள் அனைவரும், களத்தில் இறங்கி போராட வேண்டும்" என வலியுறுத்தினார்.
போராட்டம் நடத்திய விவசாயிகள், நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் 8 பேர் மீது செம்பனார்கோவில் காவல்துறையினர் நேற்று பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து, போராட்டத்தை தூண்டும் விதமாக இரணியன் செயல்படுவதாகக்கூறி, காவல்துறையினர் அவரை கைது செய்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப் பின் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். போராட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளரை கைது செய்தது, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.