திருப்பூர் மக்களவைத் தொகுதி ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.
திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் திமுக கூட்டணிக் கட்சியினருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகள், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் இன்று வழங்கினார்.
பின்னர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைப்பகுதிகளில் டிப்பர் லாரிகள் மூலம் மண் அள்ளுவது மிகவும் சாதாரண செயலாக நடைபெற்று வருகிறது.
நீர் நிலைகளில் மண் அள்ளுவது சமூக விரோதச் செயலாகவும், சட்ட விரோதச் செயலாகவும் உள்ளதால் மண் அள்ளுவதற்கு தடை விதித்திட வேண்டும்.
நம்பியூர் ஒன்றியம் ஈரோடு மாவட்டத்தின் சாரய விற்பனையின் தலைநகரமாக விளங்கி வருகிறது. நம்பியூரில் மட்டும் 72 சாராயக் கடைகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுவதால் கள்ளச்சாராயத்தை தடை செய்துள்ள சூழலில் சாராய விற்பனையை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதேபோல், குப்பிலிபாளையம் பகுதியில் பட்டாதாரருக்கு சொந்தமான நிலத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவோடு 100 குடிசைகள் போடப்பட்டுள்ளது.
அதனை காலி செய்ய மறுத்ததால் நில உரிமையாளர் உயர்நீதிமன்றத்திற்கு சென்று குடிசைகளை காலி செய்வதற்கான ஆணையைப் பெற்று வந்தும் கூட வருவாய்த்துறையினர் நில உரிமையாளரின் சொந்த இடத்தில் ஆக்ரமிப்பு செய்து அமைத்துள்ள குடிசைகளை அகற்ற பயப்படுகிறார்கள்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், மக்களின் குறைபாடுகளைக் கொண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணியினர் அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.