தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அலுவலராக, அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று, கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 150 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இங்கு இதுவரை நான்கு இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் அவற்றை விரிவுப்படுத்தும் வகையில் தாலுகாவிலும் முகாம்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 1500 முதல் 2000 படுக்கைகள் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 16 ஆயிரத்து 900 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அவைகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன" என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகர ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.