சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைப்பதற்காக சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் வேலைகளில் அரசு ஈடுபட்டு வந்தது. இதற்குப் பல்வேறு மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்றம் எட்டு வழிச்சாலைகளுக்கான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளநிலையில், உச்ச நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை வழக்கை அவசர வழக்காக, எடுத்து விசாரிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை கூறியுள்ளது.
இதன்காரணமாக, எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசின் இந்தச் செயலைக் கண்டித்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செ.நாச்சிப்பட்டுப் பகுதியில் எட்டு வழிச்சாலைக்காக விளைநிலங்களை பறிகொடுத்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் ஒப்பாரி வைத்து, எட்டு வழிச்சாலை குறித்து வேதனையைப் பதிவுசெய்தனர்.
மேலும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியும், கால்நடைகளை முன்னிறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியும், தங்களது நிலங்களை அரசு கையகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் உறுதியளித்தனர்.