செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன். திருப்போரூர் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவருமான லட்சுமிபதி, இவரது தந்தை ஆவார்.
செங்காடு ஊரைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும், திமுக எம்.எல்.ஏ., இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக அறிய முடிகிறது.
இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.,வின் பூர்வீக ஊரான செங்காட்டில் அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இமயம் குமார் வாங்கி கொடுத்துள்ளதாகவும், இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, நிலத்தைப் பார்வையிடுவதற்காக சென்னையைச் சேர்ந்தவர்களுடன் வந்த இமயம் குமாருக்கும், எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதிக்கும் நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதியை அரிவாளால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம்குமாரின் காரை நோக்கி சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், கீரை வியாபாரி சீனிவாசன் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சைப் பெற்று வருகிறார். அரிவாளால் வெட்டப்பட்ட லட்சுமிபதி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலத் தகராறில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூடு விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமானதை அடுத்து திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்து, இரு மாவட்ட காவல் துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 12) நண்பகல் 12 மணியளவில் சென்னை அருகே உள்ள மேடவாக்கம் பகுதியில் உறவினர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருந்த திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதய வர்மன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், திமுக எம்.எல்.ஏ., இதய வர்மன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை செங்கல்பட்டு குற்றவியியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி காயத்திரி தேவி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரித்த நீதிபதி அவர்கள் ஆறு பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.