தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(36). இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணிபுரிந்தார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எழுந்த விஷவாயு தாக்கியதில் பாஸ்கர், ராதாகிருஷ்ணன் என்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராஜ்குமாரும் விஷவாயு தாக்கியதில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு வீரர்கள், விபத்தில் சிக்கிய இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு இன்று அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, உ.அம்மாபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீயணைப்புத் துறை தென் மண்டல இணை இயக்குநர் சரவணக்குமார், தேனி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்பட பலரும் மலர் வளையம் வைத்து மரியதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த ராஜ்குமாரின் உடல் மயானக்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு காவல் துறை சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஜூலை 15 இல் சிறப்பு ஐ.ஏ.எஸ் அலுவலர் பதவியேற்பு