தமிழ்நாட்டில் பல்வேறு இயற்கை சீற்றங்கள், இன்னல்களின் போது நம்மிடையே மனிதாபிமான மிக்கவர்கள் நீட்டும் உதவிக்கரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். தற்போது கரோனா ஊரடங்கு நேரத்திலும் பல்வேறு தன்னார்வலர்கள் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வலர்கள் ஒருபுறம் செயல்பட, தன்னார்வலர்களுக்கு இணையாக பணியின் போது காவல் துறையினரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே, “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற வாசகத்துக்கு உதாரணமாக, நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவருக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் காவலர் முதலுதவி செய்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொலி சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஈடிவி பாரத்திலும் இதுகுறித்த செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, நேற்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், பெண் காவலர் சாந்தியை நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்து, பரிசளித்து மரியாதை செய்துள்ளார்.