தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் கரோனாவால் மொத்தம் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 369 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருவபர்களை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியிலேயே கண்காணித்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்துப்பட்டு வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்படுவோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி நகராட்சியில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 22 பேர், காய்ச்சல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் 16 பேர், அலுவலக பணியாளர்கள் 40 பேர் என மொத்தம் 78 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அலுவலக வாளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், ஊழியர்கள் பணிபுரிந்த அறைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.