தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் - செல்வி தம்பதி. இந்தத் தம்பதியினர் பெங்களூருவிரில் குடும்பத்துடன் தங்கி வேலைப் பார்த்து வருகின்றனர். இவர்களது மகளுக்கும் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (செப்.2) அவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன் பால் வாங்கி வருகிறேன் எனக்கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய அவர்களது மகள், வீடு திரும்பாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தங்களது மகள் தனது காதலருடன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரிய வந்ததை அடுத்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், ஜெயபால் - செல்வி தம்பதியினரின் மகளையும் அவரது காதலரையும் காவல் துறையினர் விசாரித்தபோது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவங்களால் ஆத்திரமடைந்த ஜெயபால், தனது மகள் உயிரிழந்து விட்டதாகக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார்.
வேப்பம்பட்டி முழுவதும் தனது மகள் அகால மரணம் அடைந்துவிட்டார் என புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை அவரது குடும்பத்தார் ஒட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.