இந்திய தேயிலை வாரியம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள தேயிலை மற்றும் தேயிலை சார்ந்த பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில் விசாரணை செய்து 10க்கும் மேற்பட்ட தேயிலை நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை ஜூலை 2020 முதல் வாரத்தில் ரத்து செய்தது.
தேனி மாவட்டம் அழகாபுரி, பகுதியில் உள்ள நாகபைடோசெம் நிறுவனம், பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமத்தை ரத்து செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேயிலை நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் ரத்து சட்ட விதிகளுக்கு முரணானது, உயர் நீதிமன்ற தீர்ப்பு நெறிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தேயிலை வாரியத்தின் 06.07.2020 உரிமம் ரத்து ஆணையையும், பதிவுச் சான்றிதழ் ரத்து ஆணையையும் தடை செய்தார். இது தொடர்பாக இந்திய தேயிலை வாரியம் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.