சமகல்வி இயக்கம் சார்பில் பெண் கருக்கொலை குறித்து தமிழக அளவிலான தொடக்க நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சமகல்வி இயக்கத்தின் பொதுச்செயலாளர் செல்ல செல்வகுமார் கூறும்போது,
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரமும், பெண் கருக்கொலை குறித்த ஆய்வும் நடத்தப்பட்டது. அப்பொழுது அங்கன்வாடிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதில் சமூகத்தில் பெண் கருக்கொலை பிரச்சனை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் பெற்ற குழந்தைகளின் பாலின விகிதங்கள் பெண் குழந்தை பிறப்புடன் சரியாக பொருந்தவில்லை. பெண் குழந்தை பிறப்பு வீகிதம் ஆண் குழந்தைகளை விட குறைவாகவே உள்ளது. பெண் குழந்தை கருக்கலைப்பில் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் முக்கிய முடிவை எடுக்கின்றனர்.
எனவே பள்ளி பாடத்திட்டங்களில் பாலின சமத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்கள், பெண் குழந்தைகளின் முக்கியத்துவங்களை உள்ளடக்கி அமைக்க வேண்டும். பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது உடன், குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் உயர்கல்வி கற்கவும், வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவமும், சமூக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கூறினர்.