தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்புத் தலைவர் சா.அருணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியதாவது; 'தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மேலும் ஏற்கெனவே பள்ளியில் நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், வருகையைக் கணக்கில் கொண்டும் மதிப்பெண்களை தொகுத்து மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர்வதற்கான படிவத்தை, அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்க வேண்டும் என்றும்; ஆதார் கட்டாயமாக்கப்பட்டு, இருப்பிடத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை படிவத்தை அனுப்பிவைக்க வேண்டும்.
ஒருவேலை புலம்பெயர்ந்த வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளை சேர்ப்பதற்கு அவர்கள் பணிபுரியும் சான்று, அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களின் சான்றை சமர்ப்பித்து சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளியின் சேர்க்கை, இருப்பிடத்தில் இருந்து ஏழு கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். அப்படி மாணவர்களின் சேர்க்கையை உறுதிபடுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் அதிகரிக்கும்.
மேலும் அதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடையும் மாணவர்கள் மேற்படிப்பு செல்வதற்கும், அறிவியல் கலை கல்லூரிகளில் சேர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.