நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நடத்திய தீவிரப் போராட்டத்தையடுத்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் பங்கீற்று ஒழுங்காற்றுக் குழுவும் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் இது நாள் வரை நியமிக்கப்படவில்லை.
மத்திய நீர் வள ஆணையச் செயலாளர் மசூத் உசேன் தற்காலிகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்று ஓராண்டு கடந்து வரும் நிலையில், புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யாமல் ஆணையம் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் எடுக்கும் முடிவுகளை ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். ஆணையம் அதனை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆணையத்தின் தலைவர் நியமனமின்றி முடங்கியதால், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் சடங்கு கூட்டமாகவே நடைபெற்று வருவது ஏமாற்றமளிக்கிறது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியன்று காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய நீர் வள ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் துணை போகும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அதனை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக இவ்வாணையைப் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். கரோனா நோய்த் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழ்நாடு போராடி பெற்ற உரிமையைக் குழி தோண்டி, புதைக்க நினைக்கிறது, மத்திய அரசு. சட்ட விரோதமாக கர்நாடகாவின் நயவஞ்சக நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போவதற்கு குடியரசுத் தலைவர் அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி, அரசாணையை திரும்பப் பெறுவதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் புதிய தலைவரை நியமனம் செய்து, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட குடியரசுத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட டீக்கடை ஊழியர் - காவலர்; வீடியோ வைரல்