விசா விதிமுறைகளை மீறியதாக, சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட தாய்லாந்து, நேபாளத்தைச் சேர்ந்த 75 வெளிநாட்டவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (ஜூலை 11) ஜாமீன் வழங்கியது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை நீதிபதி குர்மோகினா கவுர் உத்தர விட்டார்.
விசாரணையின் போது, அனைத்து வெளிநாட்டினரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த ஜூன் 7ஆம் தேதி 122 மலேசியர்களும், 21 நாடுகளை சேர்ந்த 97 வெளிநாட்டவருக்கும், அதேசமயம் ஜூன் எட்டாம் தேதி எட்டு நாடுகளைச் சேர்ந்த 76 வெளிநாட்டவருக்கும், பங்களாதேஷைச் சேர்ந்த 82 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 33 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 445 வெளிநாட்டவருக்கு நீதிமன்றம் இதுவரை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் 36 நாடுகளைச் சேர்ந்த 956 வெளிநாட்டவர்களின் மீதான இவ்வழக்கில், காவல்துறையினர் ஜூன் மாதம் 589 குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விசா விதிகளை மீறி, டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.