ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல, மகளிருக்கான டி20 சேலஞ்ச் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில்,டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 77 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து, 143 ரன் இலக்குடன் ஆடிய வெலாசிட்டி அணி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், சூப்பர்நோவாஸ் அணி இப்போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெலாசிட்டி அணியில் அதிபட்சமாக டேனியல் வியாட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடரில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி, டிரையல் பிளேசர்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன. இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில், சூப்பர்நோவாஸ் அணி முதலிடத்தையும், வெலாசிட்டி அணி இரண்டாவது இடத்தையும் பெற்றன. டிரையல் பிளேசர்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்தது. இதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், சூப்பர்நோவாஸ் அணி, மீண்டும் வெலாசிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.