கோவையில் கரோனா வைரஸ் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் (ஜூலை 5) வரை 464 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீடு அட்டை பெற்றவர்கள், அட்டை பெறாத தகுதியுள்ளவர்களுக்கு சுகாதாரத்துறையினரின் பரிந்துரையின் பேரில் தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார் ஆய்வகங்களுக்கு செலுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை காப்பீட்டுத் திட்டத்தில் சேராத நோயாளிகள் 11 ஆயிரத்து 535 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான கட்டணத்தை தனியார் ஆய்வகங்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர் அஜய் யாதவ், இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது, “கோவையில் உள்ள நான்கு தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரோனா ஆய்வு செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அந்நிறுவனங்களுக்கு பணம் அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். காப்பீட்டுத்திட்ட அட்டை பெறாதவர்களுக்கு சோதனை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரிலேயே தனியார் ஆய்வகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆய்வகங்களின் தரப்பில் கூறுகையில், சுகாதாரத்துறை அலுவலர்கள் அனுப்பும் மாதிரிகளை சோதனை செய்ததற்கான கட்டணம் முழுவதுமாக இன்னும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் கடந்த 28ஆம் தேதி முதலே சுகாதாரத்துறையின் மாதிரிகளை சோதனைக்கு நாங்கள் பெறவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து வரும் மாதிரிகளை சோதனை செய்ய எங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. சோதனை செய்வதற்கான விதிமுறைகளை நாங்கள் முறைப்படி பின்பற்றி வருகிறோம். இப்போதும் கரோனா பரிசோதனை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மாநில சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர் அஜய் யாதவ் கூறுகையில், “கோவையில் ஆய்வகங்கள் செயல்பட தடை விதிக்கவில்லை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆய்வகங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கும் எண்ணம் இல்லை- தமிழ்நாடு அரசு