கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை, சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. இதனிடையே, விமான விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில், "நிலம் கையகப்படுத்துவது தொடர்பில் முறையான கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெறவில்லை. விமான விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்த எங்களது கருத்துகளை அரசு பரீசிலிக்கவில்லை.
எங்களுடைய நிலத்திற்கு நாங்கள் செல்ல பாதை கிடைக்காது என விமான அலுவலர்கள் மறுக்கின்றனர். எனவே, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து, நிலம் கையகப்படுத்தக் கூடாது" என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. கடந்த விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக் கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.
அவர்களுக்கான நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி விட்டது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பளித்த நீதிமன்றம், " பாதை தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி, நிலத்தைக் கையகப்படுத்தி திட்டத்தைத் தொடரலாம். இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தர வேண்டும்" என உத்தரவிட்டனர்.