கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவிற்கு இந்து சமய அறநிலைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்த அனுமதி வழங்கியது.
ஆண்டாள் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கிய நிலையில், முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று (ஜூலை 24) பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கக் கோரி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியின்றி பேரணியாக சென்று கோயிலுக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, அவர்களை காவல்துறையினர் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டக்காரர்கள் கோயில் செயல் அலுவலரிடம் கோயிலுக்குள் வழிபட அனுமதி கோரி மனு அளித்தனர்.