உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து, 233 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் அதிரடி வீரரான பெயர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் மலிங்காவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, மலிங்கா தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் ஜோ ரூட், ஜெம்ஸ் வின்ஸ், பட்லர் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அணிக்கு நம்பிக்கைத் தந்தார்.
இவர்களைத் தொடர்ந்து வந்த மொயின் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.

இதனால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டன. இதனிடையே, ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் தனிஒருவராக சமாளித்து வந்தார். இந்நிலையில், அணியின் வெற்றிக்கு 19 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பிரதீப் பந்துவீச்சில் மார்க் வுட் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி இப்போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இலங்கை அணி தரப்பில் மலிங்கா நான்கு, தனஞ்ஜெய சில்வா மூன்று, உடானா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். சமீபகாலமாக, இலங்கை அணி ஃபார்மில் இல்லாதததால், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என நினைத்த பெரும்பாலான ரசிகர்களுக்கு இலங்கை அணி சர்ப்ரைஸ் தந்துள்ளது.