இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 7ஆவது லீக் போட்டி கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதீன் நைப் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன் படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆப்கான் வீரர் முகமது நபியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி 33 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்றப் பின், ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மலிங்கா நான்கு ரன்களிலும், லக்மல் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் பெரேரா 78 ரன்கள் விளாசினார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி நான்கு, ரஷித் கான், தவ்லத் சாட்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக 21.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 144 ரன்களை எடுத்த இலங்கை அணி, அடுத்த 15.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மோசமாக இருப்பதை காட்டுகிறது.
இதைத்தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.